தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

வெப்பநிலை குறித்த வானிலை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

முதல்-அமைச்சர் ஆலோசனை

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதல்-அமைச்சர் விஜய், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?

இதற்கிடையே, வானிலை ஆய்வு மையமும், "தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4-ந் தேதி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஜுன் 4-ந் தேதிக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் வெப்பம் குறையும்" என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குநரே தமிழக அரசிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையிலேயே தமிழக அரசு முடிவு எடுக்கும் என்பதால், இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அனேகமாக, ஜூன் 8-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.