தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்ற 11 வயது பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுப்புலட்சுமி(41). இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(11). இவர் புதிய துறைமுகப் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதை கண்டுள்ளார்.
இதையடுத்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் மோட்டாரை அணைப்பதற்காக சென்று சுவிட்சை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவியை பதறியடித்துக் கொண்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவி பிரியதர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.