தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை

தூத்துக்குடியில் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வேடநத்தம் கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியும் மாணவி கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வேடநத்தம் கிராமத்தின் எல்லைப்பகுதியில் அந்த மாணவி ஆடைகள் கலைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வேடநத்தம் கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் (ராமேஸ்வரம் செல்லும் பாதை) அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலையாளிகளைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என மக்கள் சுமார் 4 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இறுதியில் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.