சென்னை,
தமிழகத்தில், பல்வேறு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 90 அணைகளை நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்த ஆறுகள் வாயிலாக பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன.
பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதால், அவை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் நீர் ஆதாரமாக உள்ளன. இந்த அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். தற்போது, 76.4 டி.எம்.சி., நீர் மட்டுமே எஞ்சி உள்ளது. சதவீத அடிப்படையில், 34 சதவீதம் மட் டுமே நீர் இருப்பு உள்ளது.
அணைகள் துார் வாரப்படாததால் அவற்றில் திடக்கழிவுகள், சேறு, சகதிகள் உள்ளன. இதனால், நீர் இருப்பு மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. கோடைக்கு பின்னும் பல மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்துகிறது. 'எல் நினோ' பாதிப்பு இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், 63 அணைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
இவற்றில் 25 சதவீத்திற்கும் குறைவான நீர் மட்டுமே இருப்பு உள்ளது. நீர் எடுக்க முடியாமல் சேறும், சகதியும் எஞ்சியுள்ளன. இது மட்டுமின்றி 17 அணைகளில் 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், பல மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து நீர்வளத்துறையினர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.