சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக அதிகமாக கிடைத்தது இன்று 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென்று பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்யை விட 2, 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவானதால் ஒரு சில மாவட்டங்களில் வெப்ப காற்று வீசியது. வெப்பத்தின தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு 4 -ந் தேதி (வியாழக் கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. 14 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. வாகன ஓட்டிகள், சிறுவர்கள், முதியவர்கள் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பகல் மட்டுமின்றி இரவிலும் உஷ்ணத்துடன் புழுக்கம் காணப்பட்டது. ஒரு வித அசவுகரியமான நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில் பள்ளி திறப்பை இன்னும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு இதனை மீண்டும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.