தூத்துக்குடி,
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளது. பக்தர்கள் சிலர் ஆபத்தை உணராமல் பாறைகள் மீது அமர்ந்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று(15-ந்தேதி) சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றைய தினம் முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் நிலையில், இன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பச்சை நிறப் பாறைகளுக்கு இடையே பழமையான சிலைகள் தென்பட்டன.
கடல் உள்வாங்கியதைக் காண ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். இதில் சிலர் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கியும், வெளியே தெரியும் பாறைகள் மீது அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். கடலின் நீரோட்ட மாற்றத்தால் திடீரென கடல் மீண்டும் உள்ளே வர வாய்ப்புள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அறிவுறுத்தியுள்ளனர்.