தமிழக செய்திகள்

தமிழகத்தில் 5 கடலோர மாவட்டங்களில் ரூ.9,470 கோடியில் கடல் உணவு ஏற்றுமதி மண்டலம்: 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக மீன்கள் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் 5 கடலோர மாவட்டங்களில் ரூ.9,470 கோடியில் கடல் உணவு ஏற்றுமதி மண்டலம் அமைய இருக்கிறது. இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடல் உணவு ஏற்றுமதிக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மீன்கள் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் 2,500 ஏக்கர் உப்பள நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 5 இடங்கள்

தற்போது, உப்பள ஆணையாளர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலங்கள் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலமான மெப்ஸ்-ன் கீழ் வரவேண்டும். இது தொடர்பாக, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மண்டலங்களில் மீன் உணவு ஆலைகள், பதப்படுத்தும் மையங்கள், குளிர்பதன வசதி, பேக்கேஜிங் மற்றும் ஏற்றுமதி போக்குவரத்து வசதிகள் ஒருங்கிணைக்கப்படும்.

1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

இந்த 5 மண்டலங்கள் வாயிலாக ரூ.9,470 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், இதன் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.