தமிழக செய்திகள்

"கள்ளக்காதலனோடு ரகசிய உறவு”: பெற்ற குழந்தைகளை சித்ரவதை செய்த தாய் கைது

தனிமைக்கு தடையாக இருந்ததால் 2 குழந்தைகளையும் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

கன்னியாகுமரி,

கள்ளக்காதலனோடு ரகசிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தைகளை சித்ரவதை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாய் கொடுமை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர்கள் சுகன்யா-அழகுவேல் தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் விட்டுச் சென்றார்.

குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்த ராஜலிங்கம் திடீரென அவர்களின் உடலில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது பற்றி சுகன்யாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு சுகன்யா பதிலளிக்காததால் ராஜலிங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தைகளை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், சுகன்யாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது.

சுகன்யா தனது பள்ளி பருவ காலத்தில் இருந்து ஒன்றாக படித்து வந்த ரஞ்சித் குமார் என்பவரை காதலித்துள்ளார். பின்னர், சுகன்யாவிற்கு அழகுவேல் என்பவரோடு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சுகன்யா ரஞ்சித் குமாருடன் தொடர்பில் இருந்து வந்தார். அழகுவேல் வேலைக்கு சென்ற பின்னர், சுகன்யா ரஞ்சித் குமாரை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்து வந்தார். இந்த சம்பவம் கணவர் அழகுவேலுக்கு தெரியவந்தது. பின்னர், சுகன்யா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து ரஞ்சித் குமார் மற்றும் சுகன்யா இருவரும் மார்த்தாண்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தனிமைக்கு தடையாக இருந்துள்ளது. இதனால் 2 குழந்தைகளையும் சிகரெட்டால் சூடு வைத்தும் கம்பால் தாக்கியும் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருப்பதற்கு தடையாக இருப்பதால் இரண்டு குழந்தைகளையும் தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுகன்யா மற்றும் ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT