பவானி,
நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது
மார்கழி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நீர்நிலை கரையோரம் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். அதேபோல் ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புனிதநீராடி தாலி கயிறு பிரித்து கட்டும் நிகழ்வு நடைபெறும்.
இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் கூடுவார்கள். ஆற்றில் புனிதநீராடிவிட்டு பவானி சங்கமேஸ்வரரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் நல்லதே நடக்கும் என்கிற ஐதீகத்தின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்காக படித்துறைகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்காக பவானி போக்குவரத்து போலீசாரால் பவானி பழைய பஸ் நிலையம், செல்லியாண்டி அம்மன் கோவில் திடல் மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடப்பதை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் கூடுதுறை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பவானி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை, சேலம், ஈரோடு, ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் லட்சுமி நகரில் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பவானி நகருக்குள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டூர், அந்தியூர், பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோடு வழியாக ஈரோடு செல்வதற்கு போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகின்றனர். ஆற்றங்கரையோரம் பவானி தீயணைப்பு நிலையம் சார்பில் நீச்சல் வீரர்களும், பவானி அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்களுடன் நடமாடும் முதலுதவி சிகிச்சை மையமும், ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.