கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன்படி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளது. த.வெ.க. போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் த.வெ.க.வின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமாரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுபற்றி செங்கோட்டையனிடம் கேட்டபோது, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இந்த பிரசாரத்திற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.