தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய பக்தர்களிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவலாளி பணி நீக்கம்

காவலாளி முத்து பக்தர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதியானது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய 3 பக்தர்கள் வந்தனர். அவர் களிடம் விரைவாக தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக கூறி கோவில் ரோப்கார் நிலையத்தில் இருந்த தனியார் நிறுவன காவலாளி முத்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. பின்பு பக்தர்கள் பணம் கொடுத்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இதுபற்றி அவர்கள் கோவிலில் பணியாற்றி வரும் தங்களது உறவினரிடம் தெரிவித்தனர். அவர், கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து லஞ்சம் பெற்றது குறித்து அவர் விசாரணை நடத்தி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தார்.

இதில், காவலாளி முத்து பக்தர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதியானது. அதைத்தொடர்ந்து காவலாளி முத்துவை பணிநீக்கம் செய்து இணை ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு அவர் பணி செய்து வந்த செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT