சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நாளை காலை முதல் பரபரப்பாக இருக்கும். இதையொட்டி தமிழக காவல்துறையின் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர்.
அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது வாக்கு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற இடங்களிலும், பிரச்சினைக்குரிய பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக டிஜிபிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நாளை வாக்கு எண்ணிக்கையை சீர்குலைத்து, சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட பாஜகவும், சில கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இதனை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.