சிவகங்கை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் பிரபு இதுவரை 60,689 வாக்குகள் பெற்று, 28,296 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 32,393 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். அதே சமயம், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 17,926 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.