தமிழக செய்திகள்

தமிழகத்தில் 17-ந்தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியலிடும் கணக்கெடுப்பும் இடம்பெற உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வரும் 17-ந்தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என வருவாய் நிர்வாக கமிஷனரும், மாநில கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலருமான முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பு மாநாடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள முதல் கட்ட வீட்டுப் பட்டியலிடும் பணிகளுக்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்யும் மாநில அளவிலான முதன்மை கணக்கெடுப்பு அலுவலர்கள் மாநாடு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில், வருவாய் நிர்வாக கமிஷனரும், மாநில கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலருமான முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்த மாநாட்டில், கணக்கெடுப்புக்கான செயல்முறை, கால அட்டவணை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய முருகானந்தம், “மக்கள்தொகை கணக்கெடுப்பு மாநிலத்தின் நிர்வாகம், வளர்ச்சிக்கான திட்டமிடல், கொள்கை வகுத்தல், நிதிப்பகிர்வு உள்ளிட்ட அரசின் முக்கிய நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது. இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாக உள்ள இந்த கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியலிடும் கணக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

17-ந்தேதி தொடக்கம்

அதன்படி, ஜூலை 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சுய கணக்கெடுப்பும், ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வீட்டுப் பட்டியலிடும் பணிகளும் நடைபெறும்” என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில், 37 மாவட்ட கலெக்டர்கள், 25 மாநகராட்சி கமிஷனர்கள், தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் மாநில அளவிலான கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.