தமிழக செய்திகள்

தேர்தலை விட சுய மரியாதையே முக்கியம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

துரோகிகளின் மொத்த கூடாரம் தேசிய ஜனநாயக கூட்டணி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. எல்லாரும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடலின் சக்சஸ். சிலர் மட்டுமே வளர்ந்தால் அது பிசினஸ். ஆட்சி அமைந்ததும் முதல் நாள் முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத்துக்கு கையெழுத்திட்டேன். பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மண் தர்மபுரி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் கூட்டத்தை விரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்துள்ளேன்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஜப்பான் உதவியுடன் நிறைவேற்றி பாதுகாப்பான குடிநீர் வழங்கினேன். தர்மபுரியின் வளர்ச்சிப் பயணம் தொடர்வதற்கு திமுகவை தேர்தலில் ஆதரிக்க வேண்டும். தர்மபுரியில் கல்லூரி மாணவிகளை எரித்து கொன்றது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையை பழனிசாமியால் சொல்ல முடியுமா?

தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி. மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்த உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் நாம் அடிக்கிற அடியில் திமிரெடுத்த பாஜக அடங்கியே ஆகவேண்டும். தேர்தலை விட சுய மரியாதையே முக்கியம். பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முழங்க அனைத்து எம்.பி.க்களையும் டெல்லிக்கு செல்ல உத்தவிட்டுள்ளேன். தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் வெல்லும்வரை நாம் ஓயப்போவதில்லை.

200 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கு சமூகத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. அப்போதுதான் மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி 'ஒரு சிலர்' மட்டும் வளர முடியும். துரோகிகளின் மொத்த கூடாரம் தேசிய ஜனநாயக கூட்டணி. இது தமிழ்நாட்டுக்கான போர். இதுலயாவது கொஞ்சம் சுயமரியாதையோட நடந்துக்கங்க பழனிசாமி அவர்களே. சிஏஏ, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை பழனிசாமி எதிர்க்கவில்லை. பேசாமல் பழனிசாமி அதிமுகவை கலைத்துவிட்டு, பாஜகவில் ஐக்கியமாகி விடலாம்.

தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான். திமுக ஆட்சி அமைந்ததும் தரப்படும் ரூ.8 ஆயிரம் கூப்பனில் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். 5 லட்சம் இளைஞர்களுக்கு ஆறு மாதங்களில் பயிற்சி அளிக்க திட்டம். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.