தமிழக செய்திகள்

சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் ஆலோசனை

ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை தவெக தீவிரமாக எடுத்து வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் தற்காலிக சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய அரசு பொறுப்பேற்றதும் தேர்வான எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.