தமிழக செய்திகள்

சட்டைப்பையில் ஜெயலலிதா படத்துடன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசியான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

சென்னை,

தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

முதல் நபராக முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் முன்பு அ.தி.மு.க.வில் பயணித்தவர். ஜெயலலிதாவின் விசுவாசியான இவர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்.

த.வெ.க.வில் தற்போது அமைச்சராகியபோதும், ஜெயலலிதா மீதான பாசம் அவருக்கு இன்னும் குறையவில்லை. இதனை பிரதிபலிக்கும் வகையில் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றபோது அவரது சட்டைபையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார். நேற்று அமைச்சராக பதவியேற்றபோதும் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.