சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அக்கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையான உழைத்தவர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். சட்டத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த போது சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான முக்கிய பரிந்துரைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதியில் அக்கறை கொண்ட சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து ஆதரித்து வந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் அவர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்று கொண்ட அவர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
சுதர்சன நாச்சியப்பன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.