சென்னை,
உயிரிழந்த காவல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தகுதியான அனைத்து நலத்திட்டப் பலன்களும் விரைவாக கிடைப்பதை உறுதிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்களின் வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் - 23.09.2026 காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர். மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தலைமையில், 23.09.2026 அன்று பிற்பகல், பாரத வங்கி, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் HDFC வங்கி ஆகிய 11 முன்னணி வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு. சத்திய பிரியா, இ.கா.ப., காவல் துறைத் தலைவர் (நலன்) மற்றும் J. ஜரினா பேகம், காவல் துறை உதவி தலைவர் (நலன்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், 'Police Salary Package (PSP)' தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, விபத்து மரணம் தொடர்பான 81 வழக்குகளில், Permanent Accidental Insurance (PAI) திட்டத்தின் கீழ் ரூ.1.00 கோடி காப்பீட்டுத் தொகை வழங்குவதற்குத் தகுதியான வழக்குகள் குறித்தும், 250 வழக்குகளில், Term Life Insurance (TLI) திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்குத் தகுதியான வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டமானது தேவையான தகவல்களை பரிமாறி கொள்வதற்கும், வங்கி அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் வழிவகுத்தது. காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்கள், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தங்களது தரப்பிலான நடவடிக்கைகளை உடனடியாக விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், உயிரிழந்த காவல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தகுதியான அனைத்து நலத்திட்ட பலன்களும் விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.