செஞ்சி,
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 41வது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் சரகத்துக் குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானாள். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவளது நிலை என்ன?, அவள் எங்கே சென்றாள்? என்பது குறித்து தெரியாமல் பெற்றோரும், போலீசாரும் விழிபிதுங்கியுள்ளனர்.
சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியதால் சிறுமி மாயமான வழக்கு கடந்த மாதம் 21-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
உடனடியாக வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த கிராமம், வனப்பகுதி, விவசாய கிணறுகள், கரும்பு தோட்டத்தில் சல்லடை போட்டு தேடினர். இருப்பினும் சிறுமி மாயமாகி 40 நாட்களுக்கு மேல் ஆகியும் அவளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் சிறுமி மாயமான வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக சத்தியமங்கலம் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமி வழக்கை கையாளுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த போலீசார் நேற்று அதிகாலையில் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜை செய்தனர்.
போலீசாருக்கு கடும் தலைவலியையும், சவாலையும் ஏற்படுத்திய செஞ்சி சிறுமி வழக்கு சுமூகமாக முடிய வேண்டியும், குற்றச் சம்பவங்களில் சிறப்பாக கையாள வேண்டியும், மாயமான சிறுமி உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த யாகம் நடத்தியதாக போலீசார் கூறினர்.
இந்நிலையில் செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 41வது நாளாக இன்றும் (21.11.2026) விசாரணை தொடர்ந்து வருகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையிடம் பரதன்தாங்கல் சுடுகாடு அருகே வைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தினர். மேலும் செங்கல் சூளை உரிமையாளர், தொழிலாளர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.