தமிழக செய்திகள்

கலெக்டர் முன்பு விஷம் குடித்த விவசாயி - தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தென்காசி,

தனது புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தென்காசியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று காலை சுமார் 9.30 மணியில் இருந்தே விவசாயிகள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காத்திருந்த நிலையில், 11.30 மணி வரை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பலர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் வழங்கும் மனுக்களுக்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவிக்கான கட்டணத்தை ரத்து செய்து கலெக்டர் அறிவிப்பு வெளியிட வேண்டும். முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு ரூ.50,000 பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயலாக உள்ளது. எனவே விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

விஷம் குடிப்பு

இந்நிலையில் கலெக்டர் கமல்கிஷோர் வந்தவுடன் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பாம்புகோவில்சந்தை பகுதியை சேர்ந்த பூவைய்யா என்ற விவசாயி, கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார்.திடீரென கலெக்டர் முன்னிலையில் தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர் மற்றும் சக அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில், பூவைய்யா தனது நிலத்தில் வாழை மற்றும் பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

அவரது பயிர்களை அருகாமையில் உள்ளவர்கள் சேதப்படுத்தி வருவதாகவும். இது தொடர்பாக பலமுறை சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூவைய்யா இங்கு வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் முன்னிலையில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.