தமிழக செய்திகள்

திருமங்கலத்தில் பரபரப்பு... திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

கலாநிதியின் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி, மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரிவாள் வெட்டு

கலாநிதி தனது இருசக்கர வாகனத்தில் அஜித் என்பவருடன் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அவர்களை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்தக் கும்பல் கலாநிதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கலாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற அஜித் படுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கலாநிதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.