தமிழக செய்திகள்

வேலூரில் பரபரப்பு: 6 வயது சிறுவன் மர்ம மரணம் - நரபலி என உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு

போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் மேல்பட்டி பகுதியில், தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டி வீட்டில் நேர்ந்த சோகம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த 6 வயது சிறுவன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். சிறுவனின் இந்த திடீர் மரணம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததை கண்ட உறவினர்கள் அவனை கொலை செய்திருக்கலாம் அல்லது நரபலி கொடுத்திருக்கலாம் எனவும் சந்தேகித்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்பட்டி காவல் நிலையப் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டானா அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து முழுமையான விசாரணை மற்றும் உடற்கூறாய்வு முடிவுக்குப் பின்னரே தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேல்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.