தமிழக செய்திகள்

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!

கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

சென்னை,

ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு

த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இளையராஜா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

செந்தில் பாலாஜி ஆஜர்

இதனையடுத்து, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர். முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

2 நாட்கள் தலைமறைவு

இந்த நிலையில் தான், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இதன் காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

முன்ஜாமீன் தள்ளுபடி

இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார்.

கைது செய்ய தடை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மீண்டும் ஆஜர்

செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் இன்று காலை திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் கையெழுத்திட ஆஜராகி உள்ளார். இதனையடுத்து, திருவல்லிக்கேனி போலீசார் செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.