தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு - கைது செய்ய போலீஸ் திட்டம்?

செந்தில்பாலாஜி, அசோக் குமாருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

சென்னை,

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

துன்புறுத்தக் கூடாது

அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் எங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் தடுக்கவில்லை.

காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 35(3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருப்பந்தது.

மனுக்கள் தள்ளுபடி

இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.

செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற மனுதார்ர்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடும் என அச்சம் உள்ளது. வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மட்டுமே கேட்கின்றோம். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் இன்னும் சரணடைந்து முன் ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்மூலம் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவுபடி இன்று வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமார் ஆஜராகாததால் அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.