தமிழக செய்திகள்

தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது; 6 பைக்குகள் பறிமுதல்

நெல்லையில் சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ்காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ்காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித் (வயது 30), மகாராஜன்(56) உள்ளிட்ட 6 பேர் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

4 பேர் கைது:

சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கிராஜா(19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம்(19) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட 6 பைக்குகளும் மீட்கப்பட்டன. மேலும் இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.