தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார். கடன் வழங்கிய நிறுவனம் அந்த லாரிக்கு காப்பீடு செய்வதற்காக புகார்தாரரிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் புகார்தாரரினால் லாரியின் பின் பகுதியான டேங்க் வாங்க முடியாமல் போய் விட்டது. இதனால் காப்பீட்டிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தர மறுத்துள்ளது.
இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்ததால், உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காப்பீட்டு தொகை ரூ.94,988, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 988-ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.