கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியது என்பது வெறும் அரசியல் சாதனை மட்டுமல்ல - மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய நேருவின் சாதனையை கடந்துள்ள பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய தலைவர்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை கடந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டின் அடித்தள வளர்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்களையும், திட்டங்களையும் உருவாக்கியவர். அதேபோன்று சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து தன்னுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தலைமையின் மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்து, நீண்ட காலம் இந்தியாவிற்கு சேவையாற்றி வரும் பிரதமர் மோடி இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றம், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளுடன் நல்லுறவை பேணுவதிலும், இந்தியாவின் குரலை உலக அரங்கில் வலிமையாக ஒலிக்கச் செய்வதிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய பெருமை என்பது வெறும் அரசியல் சாதனை மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்றதற்கான அங்கீகாரமாகும். அந்த வகையில், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், மேலும் பல மக்கள் நலத் திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில் நேருவின் சாதனையைத் தொடர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.