சென்னை,
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளராக சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது.
இதன்படி மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை இடைத்தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேது (எ) சேது செல்வம் அவர்கள் கழக வேட்பாளராக போட்டியிடுவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரங்கசாமி ராஜினாமாவால் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.