தமிழக செய்திகள்

காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது: தங்கம் தென்னரசு

மேகதாது அணை தொடர்பான அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு அதிமுக, பாமக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உறுப்பினர்கள் அண்மையிலே சட்டமன்றத்திலே மேகதாது பிரச்சனை குறித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் இந்த விவகாரத்தில் திமுக முன்மொழிந்த ஒரு திருத்தத்தினை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது என்பதை நாம் மிக நன்றாக அறிவோம்.

காவிரி நதியின் குறுக்கே

இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அது மீண்டும் பேரவையிலே ஒரு விவாத பொருளாக உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,, ஏன் இந்த திருத்தம் தேவையானது, அவசியமானது, டெல்டா மக்களுடைய நலனை, விவசாய பெருங்குடி மக்கள் நலனை பாதுகாப்பதற்கு அது எவ்வளவு இன்றியமையாது என சொல்ல வேண்டியது அவசியம். மேகதாது அணை பிரச்சனையில், மேகதாட்டில் நாம் அணை கட்டக்கூடாது என்பதற்காக பலமுறை நம்முடைய சட்டப்பேரவையில் நாம் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அது தொடர்பாக அரசினுடைய சார்பில் பொறுப்பில் இருக்கக்கூடிய பல்வேறு காலகட்டங்களில் இருந்த பிரதமர்களை, ஒன்றிய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து நம்முடைய தரப்பில் இருக்கக்கூடிய நியாயங்களை நாம் எடுத்துச் சொல்லி முறையிட்டிருக்கிறோம். பல அனைத்து கட்சி கூட்டங்களையும் கூட்டி, இந்த மேகதாட்டுவில் நம்முடைய காவிரி நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு நம்முடைய கடுமையான எதிர்ப்பையும் நாம் தெரிவித்திருக்கிறோம். இந்த மேகதாது அணைக்கட்டும் பிரச்சனை என்பது காவிரி நடுவர் மன்றம் முன்போ அல்லது உச்சநீதிமன்றத்திலே முடிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய பல பிரச்சனைகளுக்கும் தாண்டி, இன்னும் உச்சநீதிமன்றத்திலே முடிவு செய்யப்படாத ஒரு புதிய பிரச்சனை என்பதை நான் இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.

மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை

பல மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய நதிநீர் தாவாப்படி அந்த சட்டத்தினுடைய அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தாலே பரிந்துரைக்கப்படக்கூடிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியினுடைய தலைமையிலான நடுவர் மன்றம்அதை நாடுவதுதான் சிறந்தது என்று இந்த வழக்கில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆஜராகி வாதாடி வரக்கூடிய மூத்த உச்சநீதிமன்றத்தினுடைய வழக்கறிஞர்கள், அரசின் சார்பாக நம்மோடு இருந்து நீண்ட காலமாக பயணிக்கக்கூடிய வல்லுனர்கள் நமக்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள்.

எந்த பாதிப்பும் வராது

எனவே மூத்த வழக்கறிஞர்களுடைய ஆலோசனைகள், இந்த துறையில் இருக்கக்கூடிய வல்லுனர்களுடைய ஆலோசனையினுடைய அடிப்படையில் மேகதாது அணையை கட்டுவது என்பது ஒரு புதிய பிரச்சனை என்கின்ற காரணத்தால், தமிழ்நாடு அரசினுடைய சார்பில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி அன்று மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர்மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாம் ஒன்றிய அரசுக்கு வைத்திருக்கிறோம்.இத்தகைய நடுவர் நீதிமன்றத்தை அமைக்கக்கூடிய சூழலில், இதனால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இறுதி செய்திருக்கக்கூடிய காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆக்கப்பூர்வமான முடிவு

புதிய நடுவர் மன்றம் அமைக்கக்கூடிய இந்த கோரிக்கை என்பது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது அடிப்படையிலே தமிழ்நாடு அரசினுடைய முடிவு; தமிழ்நாடு மக்களுடைய நலனை காக்க, விவசாயிகளினுடைய நலனை காக்க, அவருடைய உரிமையைக் காக்க, காவிரி உரிமையை நாம் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முடிவுதான் இந்த நல்ல முடிவு என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன் தீர்மானத்தில் திருத்தம் முதலமைச்சர் அவர்களாலே முன்மொழியப்பட்டு, அது பேரவை உறுப்பினருடைய முடிவுக்கு விடப்பட்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களாலும் கடந்த 19 ஆம் தேதி அது ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

நலனை காப்பதற்கான முயற்சி

இந்த நடுவர்மன்றம் அமைப்பதால் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தாலே வழங்கப்பட்டிருக்கக்கூடிய காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்த விதத்திலும் அது பாதிப்பு வராது. அந்த தீர்ப்பை இது எந்த விதத்திலும் ரீ-ஓப்பன் செய்யவும் முடியாது என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். எனவே இப்போது மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர்மன்றம் அமைக்க இந்த அவையில் சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதல் அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தோடு நாங்கள் அளித்த திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருத்தத்தோடு நிறைவேற்றப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய இந்த தீர்மானம் என்பது தமிழ்நாட்டு மக்களுடைய, குறிப்பாக டெல்டா மக்களுடைய விவசாய பெருங்குடி மக்களுடைய நலனை காப்பதற்கான ஒரு முயற்சி என்பதுதான் இதிலே உண்மை.

ஒருமனதாக ஏற்க வேண்டும்

எனவே இதை மீண்டும் ஒரு விவாத பொருளாக்கி, தமிழ்நாட்டு மக்களுடைய உரிமையை காக்கக்கூடிய விஷயம், விவசாயிகளுடைய நலனை பாதுகாக்கக்கூடிய ஒரு விஷயத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்குவது என்பது, கடந்த 19ஆம் தேதி அன்று அவையிலே நாம் காட்டி இருக்கக்கூடிய ஒற்றுமை உணர்வை பாதிப்பதாக, அதை தாண்டி நமக்குள்ளே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளுடைய பிளவு இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை அரசியல் ஆக்குவதை போல அமைந்துவிடும் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்டி, அத்தகைய ஒரு சூழ்நிலையை நாம் ஒருபோதும் அனுமதித்து விடக்கூடாது. அது கர்நாடக அரசுக்கு அது சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும். [எனவே அத்தகைய சூழ்நிலையை நாம் அனுமதிக்க கூடாது. எனவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணையில் இருந்து ஒருமனதாக இதை ஏற்றுக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பதை திமுக சார்பில் நான் இங்கே கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.