கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் உறைப்பனி காணப்படுகிறது. இந்தநிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர்செடிகளை பனிப் பொழிவில் இருந்து பசுமை வலைகளை போர்த்தி பூங்கா ஊழியர்கள் பாதுகாக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதன்படி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தலைமையில், ஊழியர்கள் தினமும் மாலை 4 மணிக்கு மலர்செடிகளின் மீது பசுமை வலைகளை போர்த்துகின்றனர்.
பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு அதனை அகற்றுகின்றனர். இதன் மூலம் பனிப்பொழிவில் இருந்து மலர்செடிகள் பாதுகாக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு கொடைக்கானலில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக முதற்கட்ட மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். கொடைக்கானல் பகுதியில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருந்து வந்தாலும், நேற்று காலை மலைப்பகுதியில் சூரிய உதயம் மிக தெளிவாக தெரிந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.