திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி,பிப்ரவரி உள்ளிட்ட மாதங்கள் குளிர் காலங்களாகும், மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில்அதிகமான வெப்பம் நிலவி வரும் நிலையில் இரவு நேரத்தில் கடும் குளிரும் காணப்படுகிறது, இதனை தொடர்ந்து இன்று காலை நேரத்தில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கீழ்பூமி, பிரையண்ட் பூங்கா, பியர் சோலா அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் நீர்ப்பனியும், ஒரு சில இடங்களில் மட்டும் உறை பனியும் காணப்பட்டது
குறிப்பாக இப்பகுதியில் உள்ள இலைகள், செடிகள்,புல்வெளி பகுதிகளில் பனி படர்ந்து,பனி துகள்களாக, பனி கட்டிகளாக, வெண் முத்துக்கள் போல காட்சியளித்தது, அதே போல நட்சத்திர ஏரியின் மேற்பரப்பில் படர்ந்திருந்த பனி சூரிய ஒளி பட்டதும் ஆவியாகி சென்ற ரம்மியமான காட்சிகள் காண்போர் கண்களை வெகுவாக கவரும் விதத்தில் அமைந்திருந்தது, குறிப்பாக இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்தனர்,
மேலும் இப்பகுதியில் அதிகாலை நேரத்தில் 9 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டதால் பல்வேறு இடங்களில் கடும் குளிரால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர் இந்நிலையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் கடும் குளிர் அதிகரித்து அதிகமான இடங்களில் உறை பனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.