தமிழக செய்திகள்

கூட்டணி கட்சிகள் கடும் நெருக்கடி: ஆட்சியில் தொடர இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க.

கூட்டணி கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருவதால், த.வெ..க. அரசு தொடர இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி நடத்தும் த.வெ.க.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு 107 இடங்களிலேயே வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளால் குடைச்சல்

தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அரசின் கொள்கை முடிவுகளில், தங்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.

தற்போது, காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்றும் மிரட்டி வருகிறது. கூட்டணி கட்சிகள் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருவது த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், த.வெ.க. அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு த.வெ.க. அரசை கவலையடைய செய்துள்ளது.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் த.வெ.க.

ஆட்சியில் தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கரூர் தொகுதி காலியானதாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கண்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. என்றாலும், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள த.வெ.க.,விரைவாக தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறது.

முதல்-அமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல்

அந்த வகையில், காலியாக உள்ள 7 தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சென்னை ஐகோர்ட்டில் அவசரமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால் மட்டுமே சட்டசபையில் அக்கட்சியின் பலம் 114 ஆக உயரும். இதுவும் பெரும்பான்மைக்கு (118) போதாது என்றாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), அ.ம.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவுடன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க, கட்டாயம் வெற்றி என்ற இலக்குடன் இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. தயாராகிவருகிறது. செப்டம்பர் 8-ந் தேதி அதற்கான விடையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.