தமிழக செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரித்து குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

தஞ்சாவூர்,

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

4 வயது சிறுமி

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள தேவனாஞ்சேரி இணைபிரியாள் வட்டம் சத்யா காலனியை சேர்ந்தவர் குருசாமி (வயது52) தொழிலாளி. இவர் குடும்பத்தினரை பிரிந்து தனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி தனது அண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்த்து விளையாடுவதற்காக 4 வயது சிறுமி அங்கு வந்தார்.அந்த சிறுமியிடம் பேசிய குருசாமி அந்த சிறுமியை தனது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று கதவை பூட்டி கொண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கிடையில் சிறுமியை தேடி அவளின் தாய் குழந்தை பிறந்த வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர்கள் சிறுமியை பக்கத்து வீட்டிற்கு தொழிலாளி அழைத்து சென்றதாக கூறினர்.

பாலியல் தொந்தரவு

உடனே அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டிற்குள் இருந்து சிறுமியின் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அக்கம, பக்கத்தினர் உதவியுடன் தகரத்தினால் ஆன கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது குருசாமி அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த சிறுமியின் தாய் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரித்து குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு தரப்பு வக்கீல் சசிரேகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி, கோர்ட்டு போலீஸ் ஏட்டு அபர்னா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.

SCROLL FOR NEXT