தமிழக செய்திகள்

11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் சேர்ந்து பாலியல் நோக்கத்துடன் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம், தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா (வயது 21) மற்றும் விஷால்(எ) ரிஷால்(19) ஆகிய 2 பேரும் சேர்ந்து பாலியல் நோக்கத்துடன் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 18.7.2025 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன நபர்களை கைது செய்தார்.

2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து. வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (3.11.2026) குற்றவாளிகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), ஊரக உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிஸ்வஜித் பாண்டர், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் (தற்போது மதுரை மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் பார்வதி பானு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.

2 போக்சோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 25 போக்சோ வழக்குகளில் 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரபட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT