தமிழக செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த ஏரலை சேர்ந்த குற்றவாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த ஏரல் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (வயது 42) என்பவர் மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று மேற்சொன்ன மகாராஜன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2,500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி. நிரேஷ் மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அரிராணி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.