சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ரூ 50 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனே வழங்க வேண்டும்;
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதான, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், அரிசி ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 17ம் தேதி பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற கறம்பக்குடி மணக்கொல்லையைச் சேர்ந்த சேகர் (56) மற்றும் மாரிமுத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை காருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராடிய அப்பெண்ணை தாக்கி, கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
அந்த வழியாக வந்த தலைமை காவலர் வாசுகி, அப்பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.
பின்னர் திண்டுக்கல்லில் சேகரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மழையூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து, வழக்கை விரைந்து முடித்து அதிகபட்ச தண்டனை வழங்கிட காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.