தமிழக செய்திகள்

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை - நயினார் நாகேந்திரன்

சிறுமி முதல் மூதாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை வேளச்சேரியில் 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. தவெக தலைமையின் கீழ் தமிழகம் அதல பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தாலே அச்சம் மேலோங்குகிறது.

கடந்த ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும் பெண்கள் வெளியில் தலைக்காட்டவே அஞ்சி நடுங்குவதைப் பார்த்தால் "ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என்ற கசப்பான உண்மை நமக்கு புலப்படுகிறது. சினிமாக்காரர்களை எல்லாம் சந்திப்பதற்கு நேரமிருக்கும் முதல்-அமைச்சருக்கு சட்டம் ஒழுங்கில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படை தெரியாதா? இல்லை பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தானே என்ற அலட்சியமா?

சிறுமி முதல் மூதாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியை நடத்திக் கொண்டு, விதவிதமாக வீடியோக்கள் மட்டும் வெளியிடுவதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கூனிக் குறுக வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.