தமிழக செய்திகள்

13 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதல்; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு நபர், 13 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி,

கடந்த 2019-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ரமேஷ் (வயது 30) என்பவர் 13 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையர்கன்னி புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு அவர் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அங்கையர்கன்னி (தற்போது EOW, சென்னை) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் செல்வபுனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.