தமிழக செய்திகள்

15 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 15 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்போதைய முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை பின்வருமாறு:

5(1) 5(n) of POCSO Act-ன்படி ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்.

IPC 417-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 அபராதம்.

IPC 323-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 அபராதம்.

IPC 506(i)-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம்.

மேற்சொன்ன தண்டனைகளை, குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மற்றும் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி (தற்போது தென்காசி மாவட்டம்) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு யாஸ்மின், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 10 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.