தமிழக செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபர் கைது

குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சம்பவத்தன்று இரவு இளம்பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் திருவனந்தபுரம் அருகே உள்ள முருக்கும்புழா பகுதியை அடைந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிடவே, சக பயணிகள் சுதாரிப்பதற்குள் மர்மநபர் ரெயில் நின்றதும் தப்பியோடி தலைமறைவானார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின்ஜோஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு பி.நாயர் தலைமையிலான போலீசார் மற்றும் பாறசாலை ரெயில்வே போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குழித்துறை வந்து எட்வின் ஜோஸை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் மீது கேரளம் மற்றும் தமிழகத்தில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT