திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சித்திரை செல்வன் (வயது 64) என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேற்சொன்ன வழக்கு மேல் நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 5.8.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதிப் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, முதியவரை கைது செய்தார்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து. வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போகசோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷவேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார். இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் அதிகாரி, அப்போதை சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதீப் ஆவார். தற்போது அவர் சென்னை மாநகரில் உதவி காவல் துறை தலைவராக (சட்டம் மற்றும் ஒழுங்கு, பொறுப்பு) பணியாற்றி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடரச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.