தமிழக செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு நபர், 9 வயது சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெள்ளத்துரை(எ) வெள்ளையன் (வயது 39) என்பவர் 9 வயது சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து. அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்சொன்ன நபரை கைது செய்தார்.

போக்சோ நீதிபதி தீர்ப்பு

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் 2.7.2026 அன்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு

IPC 366-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.

9(m) r/w 10 of Pocso Act-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏக காலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரனை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சன்முகம் (CWC), திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, மற்றும் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி. வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா (தற்போது சென்னை) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பார்வதிபானு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.

14 போக்சோ வழக்குகளில் 14 குற்றவாளிகளுக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 14 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.