தமிழக செய்திகள்

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி தாலுகா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இல்லாததால், அவர் தனது தாய்மாமன் காளிமுத்துவின் பாதுகாப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காளிமுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது உறவினரிடம் தெரிவித்தபோது, காளிமுத்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதையடுத்து, மாணவி சார்பில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி எழில் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளிமுத்துவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT