மதுரை,
தமிழக அரசு சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண்' சிறப்புப் படை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாநகர பகுதியில், இதற்காக 4 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 பெண் போலீசார் என 12 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மாநகர பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டுக்கு செல்வதற்காக தெற்குவாசல் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி, சிங்கபெண் சிறப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு பிரிவினர் விரைந்து சென்று, அந்த மாணவியிடம், நடந்த விபரங்களை கேட்டறிந்து, அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை, அளித்த புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு படையினர், உதவியுடன் சம்பவ இடம் மற்றும் அருகில் உள்ள ஆட்டோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் நடத்தினர். அதன் அடிப்படையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மதுரை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் முகமது இப்ராகிம் (வயது 65) மற்றும் போலீசார் விசாரணையின் போது உண்மையை மறைத்து குற்றவாளிக்கு உதவியாக இருந்த மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் அப்பாஸ் (55) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.