ஆசிரியர் கைது 
தமிழக செய்திகள்

பண்ருட்டியில் 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, ஆசிரியரின் தவறான அத்துமீறல்கள் குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில், 2-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள சாத்திப்பட்டு பகுதியில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், அகஸ்டின் (24) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக, ஆசிரியர் அகஸ்டின் அந்த சிறுமிக்கு வகுப்பறையில் தனியாக இருக்கும் போது பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி முற்றுகை

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, ஆசிரியரின் தவறான அத்துமீறல்கள் குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். சிறுமி கூறிய விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரமடைந்தனர். இன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர்.

கைது

அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் அகஸ்டினை பிடித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அகஸ்டினை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.