தமிழக செய்திகள்

தருமபுரி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதை மாணவிகள் தனது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

தருமபுரி,

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் கணித ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவர்களுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் இதனை தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது

பின்னர், இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தங்கவேலுவிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், தங்கவேலு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT