தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் சுங்கச்சாவடி பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: மேலாளர் கைது

புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் ஏராளமான பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சொந்தமான சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அதன் அருகே சுங்கச்சாவடி அலுவலகமும் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ஏராளமான பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பில் போடுவது மற்றும் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுங்கச்சாவடியில் அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த அவதேஷ் சிங் (வயது 58) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சில பெண் ஊழியர்களிடம் தன்னுடைய உள்ளாடைகளை துவைத்து தருமாறு கூறி தொந்தரவு செய்தாராம். நாளுக்குநாள் அவரது தொல்லை அதிகமான நிலையில் அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பெண் ஊழியர்களுக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங்கை அதிரடியாக கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.