தமிழக செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை தண்டனை; போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சென்னை மாநகரில் விளையாடிக்கொண்டிருந்த 9 மற்றும் 10 வயது சிறுமிகளுக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

சென்னை,

சென்னை மாநகரில் விளையாடிக்கொண்டிருந்த 9 மற்றும் 10 வயது சிறுமிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ம் தேதி முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அந்த முதியவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு பிறகு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 63 வயதுடைய முதியவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.