தமிழக செய்திகள்

லிப்ட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சென்று விசாரணை நடத்தினர்.

நெல்லை,

நெல்லை மாநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 24 மணி நேரமும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் கொடுத்த முகவரிக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் தனது உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்ததும், 'லிப்ட்'டில் சென்றபோது ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 49) என்பதும், அந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. தங்களிடம் சிக்கிய பாஸ்கரை பிடித்து பாளையங்கோட்டை போலீசில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர். பாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.